
மருத்துவர். ராஜா ஏகாம்பரம்,
குழந்தைகள் நல நிபுணர் மற்றும் உணவு ஆலோசகர்,
மிஸஸ் மருத்துவமனை, பொள்ளாச்சி.
இன்று சென்னையை சேர்ந்த ஒரு மருத்துவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது மிகவும் வருத்தப்பட்டு ஒரு செய்தியைக் கூறினார். பேலியோ உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பலர் மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமலேயே அவர்கள் இதற்கு முன்னால் சர்க்கரை நோய்க்கு எடுத்துவந்த இன்சுலின், மாத்திரைகளை பேலியோ ஆரம்பித்தவுடன் நிறுத்திவிடுகிறார்கள்.
பிறகு முறையாக பேலியோ உணவையும் சாப்பிடுவதில்லை, நடைப்பயிற்சியும் செல்வதில்லை ,உடற்பயிற்சியும் செய்வதில்லை.
சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருந்தால் உடம்பில் தலை முதல் கால் வரை அனைத்து உறுப்புகளையும் பாதிக்கும் தன்மை கொண்ட ஒரு கொடிய நோய்.
1. இருதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டால் மாரடைப்பு(Myocardial infarction) ஏற்படும். மரணம் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.
2. மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டால் பக்கவாதம்(stroke) ஏற்பட வாய்ப்பிருக்கிறது இதனால் கை,கால்களை உபயோகப்படுத்த முடியாமல் ,நடக்க முடியாமல் போகலாம், பேச முடியாமல் போக வாய்ப்பிருக்கிறது.
3. கண்ணில் ரத்த கசிவு ஏற்பட்டால் பார்வையிட வாய்ப்பு இருக்கிறது (Diabetic retinopathy).
4. கிட்னி செயல் இழந்து போக வாய்ப்பிருக்கிறது(Kidney failure due to Diabetic nephropathy) இதை சரிசெய்ய டயாலிசிஸ் பின் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்படுகிறது.
5. காலில் புண்(Diabetic foot) ஏற்பட்டால் அதை சரி செய்ய முடியாமல் போகும் பட்சத்தில் கால் விரல்கள் அல்லது காலையே எடுக்கும் நிலை ஏற்படுகிறது.
சர்க்கரை நோயை பேலியோ உணவின் மூலம் கட்டுப்பாட்டில்தான் வைக்க முடியும், சில மாதங்கள் பேலியோ சாப்பிட்டால் சர்க்கரை நோயைக் குணப்படுத்த முடியாது. பேலியோ உணவு ஆரம்பித்து சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு மாவு சத்து உணவுகளை ஏதாவது ஒரு நாள் சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடுவதுதான் நல்லது(ஏனென்றால் இவர்களுக்கு இருக்கும் இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் சரியாவதற்கு பல வருடங்கள் ஆகும்). தினமும் அவர்கள் மாவு சத்து உள்ள உணவுகளை சாப்பிட ஆரம்பித்தால் மீண்டும் அவர்களுக்கு உடல் பருமன் மற்றும் சர்க்கரை அளவுகள் அதிகமாக வாய்ப்பு இருக்கிறது. சர்க்கரை நோய் ஒருவருக்கு வந்துள்ளது என்று கண்டுபிடிக்கும் போதே அவருக்கு சர்க்கரை நோயினால் உள்ளுறுப்புகளில் வரும் பாதிப்புகள் 50 சதவிகிதம் ஏற்பட்டிருக்கும். அதற்குப் பின் அவர்கள் சக்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்காமல் இருந்தால் மீதமிருக்கும் 50 சதவிகித உள்ளுறுப்பு பாதிப்புகளும் விரைவாக ஏற்படும்.
சர்க்கரை நோயுள்ளவர்கள் பேலியோ உணவை ஆரம்பித்தால் தினமும் வீட்டிலேயே ஒரு குளுக்கோமீட்டர் கருவி மூலம் வீட்டிலேயே சர்க்கரை அளவுகளை பரிசோதனை செய்து, அந்த சக்கரை அளவுகளுக்கு ஏற்ப கொஞ்சம் கொஞ்சமாக மாத்திரை அல்லது இன்சுலின் அளவுகளை குறைப்பது நல்லது. இதற்கு உங்களுடைய மருத்துவர்கள் உதவினால் சிறப்பாக நீங்கள் செய்ய முடியும்.
பேலியோ உணவுக்குப் பிறகு அனைவராலும் சக்கரை மாத்திரைகள், இன்சுலின் ஊசி முழுவதுமாக நிறுத்த முடியாது. உங்கள் உடலில் கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் இன்சுலின் சுரக்கும் தன்மையை இழந்து இருந்தால், நீங்கள் முறையாக பேலியோ உணவு சாப்பிட்டாலும் இன்சுலின் அளவுகளை குறைக்க மட்டுமே முடியும் நிறுத்த முடியாது. தினமும் இன்சுலின் தேவை குறையும். நீங்கள் மாத்திரை, இன்சுலின் இரண்டும் எடுத்துக் கொண்டிருந்தால், மாத்திரை அளவையோ அல்லது இன்சுலின் அளவையோ குறைக்க முடியும். இது ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.
வயதான பிறகு வரும் டைப் 2 சர்க்கரை நோய் 90 சதவீதம் பேருக்கு உள்ளது. இவர்களின் ரத்த சர்க்கரை அளவுகள் தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குள் இல்லாத நிலையில் இவர்கள் டைப் 1 சர்க்கரை நோயாளிகள் போல மாறி விடுகிறார்கள். இப்படி மாறி விட்டால் இவர்கள் தினமும் இன்சுலின் ஊசி போடாமல் இருக்க முடியாது.இப்படி டைப் 1 நோயாளியாக மாறியவர்கள் பேலியோ உணவை முறையாக சாப்பிட்டாலும் இன்சுலின் ஊசி அளவுகளை குறைக்க முடியுமே தவிர நிறுத்த முடியாது.
என்னுடைய மருத்துவ நண்பர் மிகவும் வருத்தப்பட்டு கூறியது, ஒரு சிலர் திடீரென்று சர்க்கரை நோயின் பாதிப்புகளால் பக்கவாதம், மாரடைப்பு, கால் புண், சிறுநீரக செயலிழப்பு உடன் பெரிய மருத்துவமனைகளுக்கு வருகிறார்கள். அவர்களை கேட்டபோது பேலியோ ஆரம்பித்து சக்கரை மாத்திரை ஊசிகளை விட்டுவிட்டோம் என்று மட்டும் சொல்கிறார்கள்.பிறகு உணவு முறையையும் தொடரவில்லை, உடற்பயிற்சியும் செய்யவில்லை, மருத்துவரையும் நாங்கள் பார்க்கவில்லை என்று கூறுவது இல்லை.இதனால் மருத்துவர்கள் பேலியோவை திட்டும் நிலை ஏற்படுகிறது.
பேலியோவைப் பற்றி தெரியாத மருத்துவர்களாக இருந்தால் உடனே போலியோ உணவை திட்டத் துவங்கி விடுகிறார்கள். பேலியோவை முறையாக பாலோ செய்தபோது சர்க்கரை கட்டுப்பாட்டுக்குள் இருந்தது , தாங்கள் இப்போது ஒழுங்காக பேலியோ சாப்பிடுவதில்லை என்பதை அவர்கள் கூறுவது இல்லை.
ஒன்னு முறையா பேலியோ பாலோ பண்றாங்க இல்லைனா முழுவதுமாக பேலியோவிற்க்கு முன்னால் சாப்பிட்டுக் கொண்டிருந்தது போல மூன்று நேரமும் மாவுச்சத்து உணவுகள் காபி, ஸ்னாக்ஸ்,மது அருந்துதல், சிகரெட் குடித்தல் என ஆரம்பித்து விடுகிறார்கள்(All or none law ).
பேலியோ உணவை தொடர முடியாவிட்டால், இட்லி ,தோசை, சாதம் முதலியவற்றை குறைவாக சாப்பிட்டு காய்கறிகளை அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் நல்லது.
இனிப்புகள் சாப்பிடக்கூடாது, பேக்கரியில் கிடைக்கும் துரித உணவுகளை தவிர்த்தால் நல்லது. அதற்கு ஏற்றார்போல் மருத்துவர்களிடம் சர்க்கரை மாத்திரைகள் அல்லது இன்சுலின் ஊசிகள் கேட்டு எடுத்துக் கொள்வது நல்லது.
சர்க்கரை நோய் கட்டுப் பாட்டுக்குள் இருந்தால் நாம் சர்க்கரை நோய் இல்லாதவர்கள் போல் ஆரோக்கியமாக இருக்க முடியும்.சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் போகும் போது நம் உடல் உறுப்புகள் அனைத்தையும் பாதிக்கும் தன்மை கொண்டது.
முடிவு உங்கள் கையில் உள்ளது.